இரட்டை ரயில்பாதை பணியால் பாதியில் ரயில்கள் நிறுத்தம்: விருதுநகரில் விடிய விடிய பரிதவித்த பயணிகள்

மதுரை: இரட்டை ரயில்பாதை பணியால் முன்னறிவிப்பின்றி ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் விருதுநகர் ரயில் நிலையத்தில் விடிய விடிய காத்திருந்து பயணிகள் அவதிக்குள்ளாகினர். மதுரை-திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இதில், மதுரை திருமங்கலம் முதல் துலுக்கபட்டி வரை இரட்டை ரயில்பாதை இணைப்பு பணி நேற்று நடைபெற்றது. பணி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. பலமணி நேரம் பணி  நீடித்ததால்,  நேற்றிரவு தென் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் சுமார் 7 மணி நேர தாமதமாக இன்று சென்னை சென்றன.

இந்த ரயில் பாதை பணி காரணமாக நேற்றிரவு  தென் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில்களான பொதிகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், ஆனந்தபுரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 7 மணிநேரம் தாமதமாக நள்ளிரவு 2 மணி முதல் மதுரை வந்து சேர்ந்தன. பின்பு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றன. விருதுநகர் ரயில்வே நிலையத்தில் பயணிகள் விடிய விடிய காத்துக்கிடந்து அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லும் ரயில்கள் வழக்கம் போல், இன்று அதிகாலை மதுரை வந்தன. சென்னை செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் சென்ற பிறகு தென் மாவட்ட ரயில்கள் இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்றன. மும்பை-நாகர்கோவில், கோவை- நாகர்கோவில் ரயில்களும் தாமதமாக சென்றன. தொழில்நுட்ப கோளாறு இதுகுறித்து மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருமங்கலம்-துலுக்கபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இரட்டை ரயில் பாதையின் இணைப்பு பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தன. மின்னணு அடிப்படையில் ரயில் இயக்கம் நடைபெற்று வந்தது. தற்போது ரயில் இயக்கம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கணினி மயமாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3 மணியிலிருந்து ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளன.

Related Stories: