பல மாதங்களுக்குப் பின்னர் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி: சமையல் சிலிண்டர் விலையை ரூ.10 குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு.!!!

சென்னை: அண்மைக் காலமாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் ரூ.10 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆகவும், பிப்ரவரி 15ம் தேதி ரூ.50 அதிகரித்து 785ஆகவும், பிப்ரவரி இறுதியில் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மார்ச் மாதம் தொடக்கத்தில் மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.835ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.10 குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.10 குறைந்து 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி எண்ணெய் நிறுவனம் கூறுகையில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருகிறது. அதனால், காஸ் சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, விலையை குறைத்தனர். இதற்குப்பின் ஜூன், ஜூலை மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்தது. இந்நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: