நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்!: உதகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை கொடுத்து பாஜக வாக்கு சேகரிப்பு..தொண்டர்கள் அதிர்ச்சி..!!

நீலகிரி: உதகையில் பாஜக தேர்தல் அறிக்கைக்கு பதிலாக அதிமுக தேர்தல் அறிக்கையை கொடுத்து அக்கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்து வருவது சலசலப்பை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இந்நிலையில், உதகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை கொடுத்து பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. உதகை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் போஜராஜன் என்பவரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

இன்று காலை உதகையில் பல்வேறு பகுதிகளில் தமது ஆதரவாளர்களுடன் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு பதிலாக அதிமுக தேர்தல் அறிக்கை பிரசுரங்களை மட்டும் அவர் வழங்கி வாக்கு கேட்டார். கோத்தகிரியை சேர்ந்த போஜராஜனின் இந்த நடவடிக்கை உதகை பாஜகவினர் மத்தியில் கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு சேகரிக்க செல்லும் போது அதிகளவில் அதிமுக கொடிகளையே போஜராஜனின் ஆதரவாளர்கள் எடுத்து செல்கின்றனர். இதுவும் உதகை பாஜக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போஜராஜன் கோத்தகிரி நபர் என்பதால் உதகை பாஜகவில் ஏற்கனவே அதிருப்தி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: