உண்மையான ஜல்லிக்கட்டு நாயகனும், கதாநாயகனும் பிரதமர் மோடி தான்: தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

திருப்பூர்: உண்மையான ஜல்லிக்கட்டு நாயகனும், கதாநாயகனும் பிரதமர் மோடி தான் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜ தலைவர் எல்.முருகனை ஆதரித்தும், கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பேசுவதற்காக தாராபுரம் வந்த பிரதமர் மோடி உடுமலை சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்துக்கு போதுமான நிதி வழங்குகிறது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லுரிகளுக்கு மோடி தலைமையிலான அரசு அனுமதி கொடுத்தது. 24 மணி நேரத்தில் நான்கு துறைகளின் அரசாணைளை பிறப்பித்து ஜல்லிக்கட்டு தடையை உடைத்தவர் மோடி. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியவர் மோடி தான். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகனும், கதாநாயகனும் பிரதமர் மோடி தான். அனைவருக்கும் வீடு எனும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்குள் மத்திய அரசின் துணையோடு, ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் உறுதியாக கட்டித்தரப்படும்.

2011 மற்றும் 2016-ம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் படி அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி இந்திய நாட்டை பின்நோக்கி கொண்டு சென்றது. சுதந்திரத்துக்கு பின் இந்தியாவை இருளில் தள்ளிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறவே படாத பாடு பட்டோம் எனவும் குற்றம் சாடினார்.

Related Stories: