நண்பன், காதலன்... ஆன்லைன்ல வாங்காதீங்க..!

நன்றி குங்குமம் தோழி

“அடிப்படையிலேயே பிரச்சினை இருக்கிறது. எதற்கு கல்வி தேவையோ, அதையெல்லாம் விட்டு வெறும் மனப்பாடம் செய்யும் பாடத்திட்டங்களாகவே இருக்கிறது. செக்ஸ் பற்றிய விழிப்புணர்வும், தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கையாள்வதில் தடுமாற்றமும், சமூக வலைத்தளங்களினால் பயன் இருந்தாலும், அதைத் தாண்டி ஏற்படும் பாதிப்பினை உணராமல் உள்ள சமூகமாகவே இருக்கிறோம்” என்கிறார் எழுத்தாளர் பத்மாவதி. தான் எழுத்தாளரான கதை, எழுதிய புத்தகங்கள் பொள்ளாச்சி சம்பவம் முதல், உலகம் முழுவதும் பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் பற்றி அலசினார். “பிறந்து வளர்ந்தது திருச்சி. தமிழ் சார்ந்து படிக்க வேண்டுமென்று சிறுவயதிலிருந்து ஆசை.

பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடம் வந்தேன். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் என்ஜினியரிங்கில் கோல்ட் மெடல். சாஃப்ட்வேர்ல வேலை... இருந்தாலும் எழுத்து சார்ந்து இயங்க வேண்டும்ன்னு யோசனை ஒரு பக்கம் தொந்தரவு செய்தது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்வது போல், “Passion, Profession ஒன்னா இருந்தா சிக்கல். காச வாங்கிதான் அடுப்பில் உலை போடணும்ன்னா அது நடக்காது. முன்பு ஒரு புத்தகம் எழுதணும்ன்னா பெரிய எழுத்தாளர்களிடம் வாழ்த்துரை, அணிந்துரை வாங்கணும். இன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்... சமூக வலைத்தளங்களில் எழுதினாலே எழுத்தாளர்கள்தான்.

வேலைக்கு நடுவே, செய்தித்தாள்கள், இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தேன். தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சுப் போட்டியில் பங்கு பெற்ற போது, நெல்லைக் கண்ணன் அவர்கள், ‘‘பேசுவதை எழுத்து வடிவத்திற்கு கொண்டு வாங்க” என்றார். சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற போது பிரபஞ்சன் அவர்கள், ‘‘நாவல் எழுதக் கூடிய அத்தனை திறமையும் இருக்கு, இது சாதாரண புள்ளி. மிகப்பெரிய அளவில் வருவ”ன்னு வாழ்த்தினார். இவர்களின் வார்த்தையால் ஊக்கமடைந்து, தொடர்ந்து எழுதினேன். பாக்யா இதழில் என் முதல் பிரசுரம் வெளியானது. என் கணவர், கவிஞர் அருண் பாரதியின் ஊக்கத்தால் இருபத்தொரு சிறுகதைகள் அதில் எழுதினேன்.’’

* புத்தகங்கள்

“கைத்தளம் பற்றிய” கொல்கத்தாவின் விலை மாதுகளின் வாழ்வு முறையையும், மனநிலையையும்  வெளிப்படுத்தியிருக்கும் பத்மாவதி, “என் எல்லா புத்தகங்களும் நிஜ வாழ்வை பார்த்தவை. வேலை சம்பந்தமாக இந்தியா முழுதும் பயணித்திருக்கிறேன். அப்போது நான் பார்த்த, மனதை பாதித்த, பதிவு செய்ய வேண்டுமென்கிற விஷயங்களை புத்தகமாக எழுதியிருக்கிறேன். அந்த பெண்கள் பிழைப்புக்காக மட்டுமில்லை, வம்சாவளியாக மிகப்பெரிய துன்பத்தையும், துயரத்தையும் வெளியே சொல்ல முடியாமல் அனுபவித்து வருகிறார்கள். அதிலிருந்து விடுவிக்க ஆளில்லை, வெளியில் வர முடியாமல் தவிக்கிறார்கள்” என்றவர் தனது அடுத்த நூலான “புரட்சியின் உச்சக்கட்டம்” பற்றி பேச ஆரம்பித்தார்.

“தில்லியில் நான் வேலையில் இருந்த போது பார்த்த அனுபவம். நாற்பது வயதிற்கு மேல் தோல் சுருங்கிய பின் வாழ்க்கையில் ஒரு துணைத் தேவை என்பதை இதில் வலியுறுத்தியிருக்கிறேன்” என்று கூறும் பத்மாவதி ஐ.டி பெண்களின் வாழ்வை மையமாக வைத்து எழுதியிருக்கும் நூல் “ஓ.எம்.ஆர் வோர்ல்ட்”. “எல்லா ஐ.டி பெண்களும் பப், கிளப் போவதில்லை. கிராமத்தில், தலையில் எண்ணை வைத்து வகுடெடுத்து சீவியிருக்கும் பெண் தான் ஐ.டி உலகத்தின் கிராஸ் கல்ச்சரலில் சிக்கிக்கொள்கிறாள். நிறுவனத்தில் மற்ற பெண்களை பார்த்து மிரள்கிறாள். பிறகு படிப்படியாக அந்த சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்கிறாள். கலாச்சார மற்றத்தால், உளவியல்

ரீதியாகவும் பாதிப்படைகிறாள்.”

* பெண்ணியம்

“நான் பெண்ணியவாதி கிடையாது. ஆண்கள் போடும் ட்ரெஸ் நானும் போடனும், அவன் தண்ணி அடிச்சா நானும் அடிக்கனும். நீ என்ன சொன்னாலும் அவன் பார்வையில்தான் தப்பு என்பது பெண்ணியம் இல்லை. சில விஷயங்களிலிருந்து எஸ்கேப் ஆவதற்காக பெண்ணியம் என்று போர்வை போற்றிக் கொள்கிறோம். இங்கு ஒரு பெண் புடவை உடுத்திக் கொண்டு, தலையில் பூ வைத்திருந்தாலே நீ அடிமை என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

மார்டனுக்கும், வல்காரிட்டிக்கும் இடையே உள்ள நூலளவு வித்தியாசம் தெரியாமல், அடிமையாகிறார்கள் சிலர். என் கணவருக்கு நான் இருக்கும் இடத்தை சொன்னா... பெண்ணியவாதி நீங்க, ஃபோன் பண்ணி பர்மிஷனெல்லாம் கேட்குறீங்க என்கிறார்கள். ஆண், பெண் ஒருவருக்கு ஒருவர் இணை. நீங்க எப்படி டாமினேட் ஆக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களோ அதே மாதிரி டாமினேட் பண்ணக் கூடாது. சமத்துவம்தான் இங்குபெண்ணியம்.”

யாருக்கானது மீடூ

‘‘பெண் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் போது அதை நாம் மிஸ்யூஸ் செய்யக் கூடாது. வேண்டாத மேனேஜர், பிடிக்காத பாய் ஃபிரண்ட் மீது பழி போடாமல் சரியான எண்ணத்தோடு தீர்வு காண வேண்டும். இங்கு சட்டமெல்லாம் ஒரு குழுப் பெண்களுக்கான விஷயமாகத்தான் இருக்கிறது. எல்லோரிடமும் போய் சேரவில்லை. அந்த பெண்களுக்குமே சைபர் அவெர்னஸ் தெரியவில்லை.

படித்த நல்ல வேலைப் பார்க்கும் பெண்களுக்கே, தங்கள் சம்பந்தமான விஷயங்களை இணையத்தில் இருந்து நீக்க தெரிவதில்லை என்பது வேதனையான விஷயம். ‘காவலன்’, ‘பீ சேஃவ்’ போன்ற ஆப்கள் ஆபத்தில் இருக்கும் போது, அலர்ட் கொடுப்பதோடு பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனை சுட்டிக் காட்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பிருக்கிறது. இதை சில பெண்கள், நாங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டும். இது பெண் சுதந்திரத்திற்கு தடையானது. உங்கள் பார்வையில்தான் தப்பு என்கிறார்கள்.”

எது சுதந்திரம்

“சுதந்திரம் என்பதை யாரும் யாருக்கும் தருவதல்ல. தாராளமாக எல்லா பெண்களும் மனதுக்கு பிடித்த நல்ல விஷயங்களை செய்யலாம். மற்றவர்களுக்கு தடையோ, தொந்தரவோ பண்ணாமல் இருப்பதே பெரும் சுதந்திரம். டிக் டாக்கில் தொப்புள் தெரியும் படி வீடியோ அப்லோட் செய்வது சுதந்திரமில்லை. சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. மார்டனைசேஷன் பேச்சில் மற்றும் உடையில் தான் இருக்கிறதே தவிர எண்ணங்களில் இல்லை.

கல்வியறிவால் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். இருந்தும் சில பெண்களுக்கு எது சரி, தவறுன்னு புரியவில்லை. நல்ல கல்வியோடு, வேலையில் திறமையை நிரூபித்து, தனக்கான இணையை தானே தேடிக் கொள்கிற அளவிற்கு பெண்கள் முன்னேற வேண்டும். கடந்த காலங்களில் பெண்களுக்கு  வரதட்சணை பிரச்சினை, இப்போது டெக்னாலஜி. சுதந்திரத்தோடு எந்த அளவில் இருக்கிறோமோ அதே அளவு விழிப்புணர்வோடு இருப்போம். நம்மை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கவனம் அவசியம்.”

பொள்ளாச்சி சம்பவம்

“பொள்ளாச்சி பிரச்சினை... கட்டாயமாக தண்டனை வழங்க வேண்டும். அதே நேரத்தில் இது மாதிரி வெளியில் வராத பல விஷயங்கள், வேறு வேறு வடிவில் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் உங்களின் தவறான புகைப்படம் அப்லோட் ஆனால்... அதை நீக்க தெரியணும். அதற்கு தற்கொலை தீர்வல்ல. இப்போது ஆண், பெண் சாதாரணமாக சேட் செய்கிறார்கள். அது காதல், ரொமான்ஸ், டேட்டிங் என செக்ஸ் சேட்டில் முடிகிறது. வீடியோ சேட்டை பதிவு செய்யும் ஆண்கள் பிரச்சினை வரும் போது வெளியிடுகிறார்கள்.

இதை தொழிலாகவே பலர் செய்கிறார்கள். இது ஒரு பெரிய நெட் ஒர்க். இவர்களுக்கு அதிக அளவில் சமூக வலைத்தளங்களை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் வேலையே. இந்த வீடியோக்கள் வெளிநாடுகள் வரை விலைக்கு பேசப்படுகிறது. இதுவும் ரேப் தான். ஆனா என்ன பெண்கள் இதற்கு எளிதாக பலியாகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பெண்களை காதல் மற்றும் தோழன் என்ற எமோஷனல் வலைக்குள் சிக்கவைத்து தங்களின் வேலைக்கு பயன்படுத்துகிறார்கள்.

டிஜிட்டலை தேவையில்லாத விஷயங்களுக்கு பயன்படுத்தும் இவர்கள், புகைப்படங்கள், வீடியோக்களை எப்படி நீக்குவது என்று கூகுலில் தேடினாலே பதில் கிடைக்கும். கூகுலில் ரிவைஸ் இமேஜ் விண்ணப்பத்தில் பதிவு செய்தால், சம்மந்தப்பட்ட போட்டோ நீக்கப்படும். ஃபேஸ்புக்கில் உள்ள ரிப்போர்ட் பிரப்பைல் மூலம் போர்ன் வெப்சைட்டில் உங்களின் வீடியோ இருந்தால், அப்யூஸ் ரிப்போர்ட்டீங் விண்ணப்பம் மூலம் அதை நீக்கலாம். பதட்டமாகாமல் சிந்தித்தாலே பிரச்சினைகளிலிருந்து வெளியேறலாம். நாங்க சொல்றது ஒன்று தான். டிஜிட்டல் உலகில் தவழலாம்.

அதே சமயம் நண்பன், காதலை ஆன்லைன்ல வாங்காதீங்க. இன்றைய தலைமுறையினர் எந்த ஒரு உரையாடலுமில்லாமல் சமூக வலைத்தளங்கள் மட்டுமே வாழ்க்கை என்றிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் அந்த கண்டுபிடிப்பு அர்த்தமுள்ளதாக மாறுகிறது. ஆனால், தற்போதிருக்கும் கண்டுபிடிப்புகளால் அழிவுகள்தான் அதிகமாக இருக்கிறது. இதை நம் சுயக்கட்டுப்பாடில்லாமல் ஒழிக்க முடியாது. இதையும் தாண்டி ஆண்கள் உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறார்கள் என்றால், அதை எதிர் கொள்ள உங்கள் கையில் தற்காப்பு பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக பெப்பர் ஸ்ப்ரே,  லேசர் லைட். இதெல்லாம் ஆன்லைனில் இருக்கிறது. லிப்ஸ்டிக்கை விட விலை குறைவுதான்.”

பெற்றோர்களின் பங்கு

பெற்றோர்கள் ஒரு ஆண் குழந்தையை, ஆண் என்கிற கர்வத்தோடு வளர்க்காமல், நீயும் வீட்டிலிருக்கும் பெண் பிள்ளையும் ஒன்னுதான் என்கிற மனநிலையை உருவாக்க வேண்டும். உங்க பசங்க என்ன செய்றாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க. பசங்களோடு நேரத்தை செலவழியுங்கள். 8வது படிப்பவன் ஆபாச வீடியோக்களை பார்த்து வக்கிரமாகிறான். இது ஒரு பெண்ணை அவன் பார்க்கும் பார்வை மாற்றுகிறது.

பேரண்டிங்கிற்கு இப்போது சிறப்பு வகுப்புள்ளது. படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பண்புகளை கற்றுக் கொடுங்கள். வேலையில் பிசியாக இருந்தாலும், உங்க குழந்தையின் நண்பர்கள் யார்,  எதிரி யார்ன்னு தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக அவர்கள் போனில் என்ன இருக்குன்னு பாருங்க. பிரச்சினைகள் அழுகிய நிலையில் உள்ளது. அதற்கான தீர்வுகள் நம்மிடம் இல்லை. வாழும் வரை நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வாழவேண்டும்’’ என்றார் பத்மாவதி.

- அன்னம் அரசு

Related Stories:

>