சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் சரக்கு கப்பல் நகர தொடங்கியது: 300-க்கும் மேற்பட்ட கப்பல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி.!

சூயஸ்: சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் சரக்கு கப்பல் நகர தொடங்கியது. ஆப்பிரிக்க கண்டத்துக்கும், சினாய் தீபகற்பத்துக்கும் இடையிலான சூயஸ் கால்வாய் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். எகிப்து நாட்டில் உள்ள இந்த வழித்தடத்தின் மூலமே ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் இணைக்கப்படுகின்றன. இதனால், சூயஸ் கால்வாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் வர்த்தகம், கடல் வழித்தடமாக விளங்குகிறது. சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த 23ம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த ராட்சத சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது.

இதனால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. 321 கப்பல்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இந்த கப்பலை மீட்க, 7வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடந்தன. ஏற்கனவே, கப்பல் தரை தட்டிய இடத்தில் இருந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது. 14 இழுவை கப்பல்கள் கொண்டு கப்பலை நகர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. எவர் கிரீன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து கப்பலை சுயமாக இயங்க செய்யும் முயற்சியில் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்ட வந்த நிலையில், எவர்கிரீன் சரக்கு கப்பல் நகர தொடங்கியது. 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு எவர்கிரீன் சரக்கு கப்பல் வழக்கமான பாதைக்கு திருப்பப்பட்டுள்ளது. இதனால், கடலில் சிக்கிய 300-க்கும் அதிகமான கப்பல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: