சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிரீன் கப்பலை மீட்கும் பணியில் முன்னேற்றம்: கப்பலை சுயமாக இயங்க செய்யும் முயற்சியில் மீட்பு குழு தீவிரம்..!

இஸ்மைலியா: சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கியது. ஆப்பிரிக்க கண்டத்துக்கும், சினாய் தீபகற்பத்துக்கும் இடையிலான சூயஸ் கால்வாய் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். எகிப்து நாட்டில் உள்ள இந்த வழித்தடத்தின் மூலமே ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் இணைக்கப்படுகின்றன. இதனால், சூயஸ் கால்வாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் வர்த்தகம், கடல் வழித்தடமாக விளங்குகிறது. சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த 23ம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த ராட்சத சரக்கு கப்பல் தரை தட்டி நின்றது.

இதனால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. இந்த கப்பலை மீட்க, 7வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடந்தன. ஏற்கனவே, கப்பல் தரை தட்டிய இடத்தில் இருந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது. 14 இழுவை கப்பல்கள் கொண்டு கப்பலை நகர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. எவர் கிரீன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கப்பலை சுயமாக இயங்க செய்யும் முயற்சியில் மீட்பு குழு தீவிரம் காட்டி வருகிறது.

கப்பலில் 25 இந்திய ஊழியர்கள்

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள ‘எவர் கிவன்’ கப்பல், ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பலில் உள்ள 25 பணியாளர்களும் இந்தியர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், எகிப்து நாட்டை சேர்ந்த 2 மாலுமிகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories: