மியான்மரில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராட்டம் தொடர்வதால் பதற்றம்; ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம்: உலக நாடுகள் கடும் கண்டனம்

நாய்பிடாவ்: மியான்மரின் ஆயுதப்படை தினமான நேற்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள், சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள் உள்பட 114 பேரை சுட்டுக் கொன்று ராணுவம் கொலைவெறி தாண்டவம் ஆடியுள்ளது. ராணுவம் மக்களை பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்துக்கு பாடுபடும் என்றும் ஜெனரல் மின் ஆங் காலிங் கூறிய மறுநாளே அவரின் கூற்றுக்கு முரண்பாடாக இந்த மிருகத்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. மியான்மரின் ஆயுதப்படை தினத்தை கொண்டாட இருப்பதால் அதற்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலையில் அல்லது பின் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என நேற்று ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி போராட்டக்காரர்களை வேட்டையாடிய ராணுவம் 13 வயதுடைய 2 சிறார் மற்றும் பச்சிளம் குழந்தையை கொன்றிருப்பதாக வெளியான செய்தி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் இந்த கொடூரம் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. ராணுவத்தின் ஈவு, இரக்கமற்ற நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் ஆயுதப்படை தினமான நேற்று வெட்கக்கேடான நாள் என்று அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட போராட்ட குழு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மியான்மரில் கடந்த பிப்.1-ம் தேதி முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணுவ ஆட்சியின் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: