குடிநீர் கேட்டு சாலை மறியல்: அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்...! தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேன்கனிக்கோட்டை அருகே காரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜமலநாயகன் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோடை துவங்கியது முதலே  இக்கிராமத்தில் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால், நீண்ட தூரம் சென்று விவசாய தோட்டங்களில் உள்ள பம்பு செட்டுகளில், குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர், அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்யக்கோரியும், நேற்று பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் திரண்டு, திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தண்ணீர் பற்றாக்குறையால், குழந்தைகளை வைத்துக் கொண்டு அவதிக்குள்ளாகி வருகிறோம். வெகு தூரம் நடந்து சென்று விவசாய நிலங்களில் உள்ள பம்பு செட்களில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம். எனவே, எங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: