வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தபால் ஓட்டு வசதி சாத்தியம் இல்லை: மக்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்...!

டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தபால் வாக்கு இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கும் திட்டம் அடுத்த ஓராண்டிற்குள் அமல்படுத்தப்படலாம்” என தெரிவித்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “விரைவில் நடக்க இருக்கின்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது சாத்தியமில்லை” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைவது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், வரவிருக்கும் மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது சாத்தியமில்லாதது என கூறியுள்ளார்.

Related Stories: