களைகட்டும் தேர்தல் களம்!: முதல் முறையாக தமிழகத்தில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரை..!!

டெல்லி: தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முதல்முறையாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகம் வர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி பிரியங்கா கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்-ஐ ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். திங்கள் நகரில் இருந்து பிரியங்கா காந்தி தமது பிரச்சார பயணத்தை தொடங்குவர் என்று தெரிகிறது. கன்னியாகுமரி தவிர பிற இடங்களில் பிரியங்கா, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வாரா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், வரும் 28ம் தேதி முதல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். அன்றைய தினமே சேலம் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சீலநாயக்கர்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்கிறார்.

Related Stories: