திருப்பதி கோயிலில் வரும் 14ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி: கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்

திருமலை: திருப்பதியில் ஓராண்டுக்கு பிறகு வரும் 14ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, வாராந்திர சேவைகளான அபிஷேகம், வஸ்திரம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இந்த சேவைகள் பக்தர்களின்றி நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த சேவைகளில் பங்கேற்க அடுத்த மாதம் 14ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சேவைக்கு 3 தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை சான்றிதழை வைகுண்டம் காம்ப்ளக்சில் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்சவர் சிலை பாதிக்காமல் இருக்க செய்யப்படும் விசேஷ பூஜை மற்றும் புதன்கிழமை நடைபெறும் சகஸ்கர கலசாபிஷகம் இனி ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். வசந்த உற்சவம் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த 3 சேவைகளில் பங்கேற்க முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்களுக்கு விஐபி தரிசனம் அல்லது அதற்கு பதிலாக டிக்கெட்டிற்கான முழு பணமும் திரும்ப வழங்கப்படும்.

பணம் திரும்ப வழங்குவது அல்லது விஐபி தரிசன டிக்கெட் பெறுவது எப்போது? என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். கடந்த 2020 மார்ச் 20ம் தேதி முதல் 2021 ஏப்ரல் 13 வரை சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை, அஷ்டதலபாத பத்ம ஆராதனை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவடா, வஸ்திரம், அபிஷேகம், நிஜா பாத தரிசனம் ஆகிய சேவைகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு விஐபி தரிசனம் அல்லது பணத்தை திருப்பி செலுத்த ஏற்பாடு செய்யப்படும். கொரோனா காரணமாக தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: