சேலம் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்க இருக்கிறது. பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி, ஒடிசாவில் இருந்து பிலாய் என்ற கம்பெனியை சேர்ந்த இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐக்கள் உள்பட 92 பேர் சேலம் வந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த கம்பெனியில் பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டம் காமஷ்யாநகரை சேர்ந்த ஆசெஷ்குமார் பூட்டியா (31) என்பவரும் இடம் பெற்றிருந்தார்.

இந்த மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் வாகன சோதனை நடத்துவதற்கென தேர்தல் பறக்கும் படைக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். நேற்று பகல் 2 மணிக்கு சென்ற ஆசெஷ்குமார் பூட்டியா, இரவு 9 மணிக்கு திரும்பினார். இன்று காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும். இதற்காக 4.30 மணிக்கு எழுந்த அவர், திடீரென தான் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். தொண்டை பகுதியில் வைத்து அழுத்தியதில் வாய்வழியாக மூக்கை துளைத்துக்கொண்டு குண்டு வெளியே வந்தது.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அவருடன் தங்கியிருந்த வீர்கள் அதிர்ச்சியுடன் எழுந்து ஓடிவந்தனர். ரத்தவெள்ளத்தில் சரிந்த அவரை அவசரமாக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆசெஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் முழுவிவரம் தெரியவில்லை. மனஅழுத்தத்தின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏகே47 துப்பாக்கியை மீட்டு அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: