பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் குமரியில் போலீஸ் அணிவகுப்பு

குளச்சல் :  கன்னியாகுமரி  நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற  பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலின் போது பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், 100 சதவீதம்  வாக்கு பதிவு நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குளச்சல் காவல்  சப்-டிவிசன் சார்பில் போலீஸ்  அணிவகுப்பு குளச்சலில் நடந்தது.

காவல்  நிலையம் முன்பு தொடங்கிய இந்த அணி வகுப்பை ஏ.எஸ்.பி.விஸ்வேஸ் பி.சாஸ்திரி  தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அணிவகுப்பு காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி  சந்திப்பு, பீச் ரோடு, மரமடி, பள்ளி முக்கு சந்திப்பு வழியாக அண்ணாசிலை  சந்திப்பு வந்தடைந்தது. இதில் சப்-டிவிசனுக்குட்பட்ட இன்ஸ்பெக்டர்கள்,  சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீசார், ஆயுதப்படை  போலீசார் கலந்து கொண்டனர்.

பூதப்பாண்டி: இதுபோல் பூதப்பாண்டி அருகே துவரங்காட்டில் போலீஸ் அணிவகுப்பு   நடந்தது. நாகர்கோவில் டவுன் டிஎஸ்பி வேணுகோபால் தலைமை வகுத்தார்.   பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி,   வடசேரி இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி, பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர்   மாரிசெல்வன், ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிஆர்பிஎப் வீரர்கள்   உட்பட 500 போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

பூதப்பாண்டியை அடுத்த   துவரன்காடு முதல் மணத்திட்டை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த   அணிவகுப்பு நடந்தது.சுசீந்திரம்: கன்னியாகுமரி சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலை ஒட்டி காவல்துறையினரின் கொடி  அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு பணிக்கன் குடியிருப்பு  ஜங்ஷனிலிருந்து வடக்கு அஞ்சுகுடியிருப்பு ஜங்ஷன் வரையிலும்,  குஞ்சன்விளை  அருகே உள்ள ஒத்தக்கடை ஜங்ஷனிலிருந்து என்.ஜி.ஓ காலனி வரையும் நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்பில் கன்னியாகுமாரி டிஎஸ்பி பாஸ்கரன், சுசீந்திரம் ஆய்வாளர் காளியப்பன், கன்னியாகுமரி  ஆய்வாளர் ஆவுடையப்பன்  ராஜாக்கமங்கலம் ஆய்வாளர்  ரமா எஸ்ஐக்கள் ஆறுமுகம்,ரவிசந்திரன்உட்பட 250க்கும்  மேற்பட்டவர்கள்  அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Related Stories: