திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதியில் சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாய் கல்வெர்ட்டை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதியில் சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாய் கல்வெர்ட்டை சீரமைக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் பகுதியில் உள்ள அவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையொட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்நிலையில் இந்த கால்வாய் மீது அமைக்கப்பட்ட தரைப்பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2 மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் நோய்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கால்வாயில் உள்ள தரைப்பாலத்தை சீரமைத்து கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: