சர்ச்சைக்குரிய பாடல் வரிக்கு எதிர்ப்பு: கர்ணன் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு: நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

மதுரை: சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இடம் பெற்றிருப்பதால் கர்ணன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த ராஜபிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் பாடல்களுக்கான டீசர் வெளியாகியுள்ளது. இதில், ஒரு பாடலில் இடம் பெற்றுள்ள  வரிகள் மிகவும் பின்தங்கியுள்ள ஆண்டி பண்டாரம் பிரிவினரை மரியாதை குறைவாக குறிப்பிடும் வகையில் உள்ளன. தணிக்கை குழுவின் முறையான சான்றிதழ் பெறாமல் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இது சட்ட  விரோதமானது. அந்த பாடலில் உள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கவும், அந்த வரியை நீக்கும் வரை படத்தை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், தணிக்கை வாரிய மண்டல அலுவலர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ், பாடலாசிரியர் யுகபாரதி, பாடலை  பாடியுள்ள இசையமைப்பாளர் தேவா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: