தமிழக மக்களுக்குப் பேரிழப்பாகும்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.!!!!

சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாலஜா அருகே தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர்  பிரிந்தது. முகமது ஜான் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திரு. முகமது ஜான் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு  பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சராக - தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து சீர்மிகு பணியாற்றியவர். மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த அவரது மறைவு - தமிழக  மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: