மீண்டும் ஆட்டத்தை காட்டும் கொரோனா: ஊரடங்கு அமல்படுத்த முடிவா?; பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்.!!!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தற்போது தான் திரும்பி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. தடுப்பூசி கண்டறியப்பட்டு 4 கோடி பேருக்கு மேலாக போட்டும், பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.  தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,149,324 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 213 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 11,645,719 பேர்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160,003 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அதேசமயம், கொரோனா பாதித்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,30,288 ஆக (95.96%)  பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2-வது அமர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதா குறித்தும், தயார் செய்யப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவும் நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Related Stories: