நெமிலியில் ஓட்டப்பந்தயம் அல்ல ஆதார் எடுக்க தாலுகா அலுவலகத்துக்கு ஓடிய பொதுமக்கள்

நெமிலி :  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றது. அப்போது வேட்புமனு தாக்கல் காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனால் அந்த நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெமிலி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனைத்து துறைகளிலும் முக்கியமாக பயன்படுத்தக்கூடிய ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், தொலைபேசி எண் போன்றவை திருத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நெமிலி தாலுகாவில் வேட்புமனு தாக்கலின்போது ஆதார் தொடர்பாக அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் காத்திருந்தனர். மாலை 3 மணியளவில் வேட்பு மனு தாக்கல் முடிந்தபிறகே பொதுமக்களுக்கு ஆதார் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் 3 மணி ஆகியதும் ஆதார் பணிகளுக்காக தாலுகா அலுவலகம் முன் ஓடி வந்தனர்.

அப்படி இருந்தும் 2மணிநேரம் மட்டுமே ஆதார் எடுக்க முடிகிறது. இதனால் மாலை 5 மணியுடன் ஆதார் சேவைகள் முடிவடைந்து விடுகிறது. மேலும் கால்கடுக்க நின்றிருந்த பொதுமக்கள் மாலை 3 மணி முதல் மேற்கொண்ட ஆதார் பதிவுகளின் போது 30 பேருக்கு மட்டுமே எடுக்க முடிந்தது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலம் ஏற்பட்டது.

எனவே பொதுமக்கள் வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் அலைக்கழிக்கப்டுவதை தடுக்க அந்தந்த கிராமங்களிலேயே ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மாலையில் 3  மணிக்கு மேல் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் அதிருப்பு அடைந்தனர்.

Related Stories: