உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!: இலங்கைக்கு எதிராக வாக்களிக்க பிரதமருக்கு அன்புமணி கோரிக்கை..!!

சென்னை: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமாறு பிரதமர் மோடிக்கு பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் உள்நாட்டு போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு 12 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மூலம் நீதிக்கான நீண்ட போராட்டம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியிருப்பதாக கூறியிருக்கும் அன்புமணி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பான தீர்மானம், வாக்கெடுப்புக்கு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, சீனாவுடன் இலங்கை அதிக நெருக்கம் காட்டுவது இந்திய பெருக்கடலில் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, நம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார். கடந்த மாதம் சென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இலங்கையில் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ வழி செய்வதாக உறுதி அளித்ததை அன்புமணி நினைவூட்டியிருக்கிறார். ஆகவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கடிதம் மூலம் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: