இரவு 10 மணிக்கு பிறகு அமைச்சர் பிரசாரம் கரூரில் திமுகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்

கரூர்: கரூரில் இரவு 10 மணிக்குப்பிறகு அமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மேட்டுத்தெரு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்குப்பிறகும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த திமுகவினர், 10 மணி வரைதான் பிரசாரம் செய்ய வேண்டும். அமைச்சர் அதை மீறி பிரசாரம் செய்கிறார் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆவேசமடைந்து திமுகவினருடன் கடும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், திமுகவை சேர்ந்த 3 பேரும், அதிமுவை சேர்ந்த 5 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவினர்களை தாக்கிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 100 பேர் திடீரென மனோகரா கார்னர் பகுதியில் நேற்று மதியம் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்நிலையில், கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வந்த எம்பி கனிமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திமுகவினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், காவல்துறையும், அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர் என்றார்.

Related Stories: