முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மணல் மூட்டைகளால் அமைத்த ரவுண்டானாவால் விபத்து அபாயம்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று சாலைகள் பிரியும் பகுதியில் ரவுண்டானா மற்றும் போதிய சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் கோரவிபத்துகள் நடைபெறும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் ஒரு பகுதி சாலை அருகே நீண்ட உயரத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் உள்ளதால் அதிலிருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் ஆபத்தான நிலையில் வந்து திரும்புகிறது.

மேலும் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் அதேபோல் மற்றொரு சாலையில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் தொலைதூரத்தில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் செல்ல தடுமாறுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆபத்தான வளைவில் ரவுண்டானா அமைத்து தரவேண்டும். அதே போல் ஒளிரும் சிக்னல் விளக்குகள் அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர. ஆனால் நெடுஞ்சாலை துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக ரவுண்டானா அமைத்து உள்ளனர்.

இதில் இரவில் மணல் மூட்டை இருப்பது தெரியாமல் தடுமாறி அதில் வாகனங்களை விட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. எனவே இப்பகுதியில் வாகன ஓட்டிகள் நலன் கருதி தற்க்காலிகமாக போடப்பட்ட மணல் மூட்டைகளை அப்புறப்படுத்திவிட்டு உடனடியாக நிரந்தரமாக ரவுண்டானா அமைத்து தரவேண்டும், அதேபோல் தூரத்தில் தெரியும் அளவில் ஒளிரும் சிக்னல் விளக்குகள் அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: