வேளாண்மை சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை: உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பிரசாரம்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்த வேனில் பிரசாரம் செய்தார். உளுந்தூர்பேட்டையில் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது. அப்படி இருந்தால் நானும் உங்களோடு இணைந்து போராட வருகிறேன்.

பஞ்சாப் போன்ற மற்ற மாநிலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு எல்லாம் குரல் கொடுக்க நான் என்ன அகில இந்திய தலைவரா? தமிழக விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை புரிந்து நான் நடந்து வருகிறேன்.  எங்களிடம் தெய்வ நம்பிக்கை உள்ளது. தெய்வ நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம். அதனால்தான் இயற்கைகூட நமக்காக மழை பெய்து ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பி தண்ணீர் பிரச்னையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. உடனடியாக மருத்துவக்கல்லூரியும் அதனுடன் இணைந்து மருத்துவமனையும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி 6 சிலிண்டர்கள் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கியில் நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளோம். மகளிர் சுய உதவி குழு கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய அறிவித்துள்ளோம். விவசாயிகள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வரும் அரசாக அதிமுக உள்ளது’ என கூறினார்.

Related Stories: