கொல்லத்தநல்லூர் கிராமத்தில் பைப்லைன் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்: ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

செய்யூர்: கொல்லத்தநல்லூர் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யும் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வழிந்து ஓடுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியமாக உள்ளதால், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியம் நுகும்பல் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊராட்சி குடியிருப்புகளுக்கு சித்தாமூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகில், பூமியின் அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் பைப் லைனில் சேதமடைந்தது. அதில், குடிநீர்  வெளியேறி சாலையில் ஆறுபோல் வழிந்தோடுகிறது. இதுபற்றி கிராம மக்கள், ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் இதுபோன்று குடிநீர்  வீணாவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சேதமடைந்துள்ள பைப் லைனை சரி செய்து  குடிநீர் வீணாவதை தடுக்க ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: