பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டி எதிரொலி அதிமுகவில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்

சென்னை: பெருந்துறை தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டது. இதில் தற்போது அதிமுக எம்எல்ஏக்களாக உள்ள எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (சாத்தூர் சட்டமன்ற தொகுதி), சி.சந்திரசேகரன் (சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி) உள்ளிட்ட 48 எம்எல்ஏக்களுக்கு தற்போது சீட் வழங்கப்படவில்லை.தற்போதைய எம்எல்ஏக்களுக்கு கட்சி சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படாததால், பல எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். சிலர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

இதில் மூன்று தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் மட்டும் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். இதையொட்டி தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் ராஜவர்மன், சந்திரசேகரன் ஆகியோர் அதிமுக கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தற்போதைய எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கு சீட் வழங்காமல், எஸ்.ஜெயக்குமாருக்கு தற்போது கட்சி தலைமை சீட் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோப்பு வெங்கடாசலம் கடந்த சில நாட்களாக கருத்து தெரிவித்து வந்தார். 10 ஆண்டு எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்து தொகுதி மக்களுக்கு தான் செய்த திட்டங்களை பட்டியலிட்டு வந்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது கதறி அழுது தனது ஆதங்கத்தை வெளியிட்டு வந்தார்.

இந்த பரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஜெயக்குமாருக்கு எதிராக நேற்று முன்தினம் பெருந்துறை தொகுதியில் தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது, அந்த தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தோப்பு வெங்கடாசலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

 அதிமுகவின் கொள்கை -குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி  களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும் ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த தோப்பு என்.டி.வெங்கடாசலம் (ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது தோப்பு வெங்கடாசலம் கதறி அழுது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Related Stories: