பசவகல்யாண் தொகுதி வேட்பாளர் சையத்ஹசரத் அலிகான் இடைத்தேர்தலில் மஜத தனித்து போட்டி: எச்.டி.குமாரசாமி உறுதி

பெங்களூரு:மாநிலத்தில் நடைபெறவுள்ள இரண்டு சட்டப்பேரவை, ஒரு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மஜத யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் நடைபெறவுள்ள பெலகாவி மக்களவை, மஸ்கி, பசவகல்யாண சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை மஜத எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  அதே போல் இடைத்தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லை. பசவகல்யாண் தொகுதியில் கட்சி சார்பாக சையத்ஹசரத் அலிகான் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.  இத்துடன் மஸ்கி தொகுதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

பெலகாவி மக்களவை தொகுதிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து உள்ளூர் தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி அவர்களின் ஆலோசனைப்படி வேட்பாளர் நிறுத்தப்படுவர்.  கடந்த 15 நாட்களாக உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி பசவகல்யாண் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. கட்சியை பலப்படுத்த கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மாநிலத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியின் ேபாது பசவராஜ்ஹொரட்டியை மேலவை தலைவராக நியமிக்க காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

தற்போது பா.ஜ. ஆதரவுடன் பசவராஜ்ஹொரட்டி தலைவராகியுள்ளார். இதை பா.ஜ. கூட்டணி என்று நினைக்க வேண்டாம். காங்கிரஸ் தலைவர்கள் மஜத குறித்து தவறாக பேசி, மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் நாங்கள் இரண்டு தேசிய கட்சிகளை ஒதுக்கி வைத்து மதசார்பற்ற நிலையில் கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறோம். யாருடனும் கூட்டணி என்ற பேச்சே கிடையாது’’ என்றார்.

Related Stories: