தேர்தல் விதிகளை மீறி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார் ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு..!!

சென்னை: ஆயிரம்விளக்கு தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் குஷ்பு தொண்டர்களுடன் ஊர்வலகமாக வந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அங்கையர் கன்னியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

அந்தவகையில், ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிருக்கிறார். முன்னராக வள்ளுவர் கூட்டத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி என கூட்டணி கட்சி தொண்டர்களுடன் சண்டி மேளம், மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் என்று ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாக வந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாக வந்துள்ளார். தேர்தல் அலுவலக வாயில் வரை தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர். எனவே குஷ்பு மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யவும் வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலில் குஷ்பு முதல்முறையாக போட்டியிடுகிறார். இதேபோல் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: