திருமங்கலம் அருகே சிட்கோ குடோனில் குவிப்பு: அமைச்சர் உதயகுமார் தொகுதியில் பதுக்கிய கம்ப்யூட்டர்கள் பறிமுதல்: பூட்டை உடைத்து பறக்கும் படையினர் அதிரடி

மதுரை: திருமங்கலம் அருகே சிட்கோ குடோனில் பூட்டை உடைத்து, அதிமுகவினர் பதுக்கிய கம்ப்யூட்டர்கள், பரிசுப் பொருட்களை பறக்கும் படை  அதிகாரிகள் அதிரடியாக நேற்று பறிமுதல் செய்தனர். அமைச்சர் தொகுதியில் நடந்த இந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மணிமாறன், அதிமுக சார்பில் அமைச்சர் உதயகுமார் போட்டியிடுகின்றனர்.  இத்தொகுதியில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் பணப்பட்டுவாடா செய்வதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, அமைச்சர் உதயகுமார்,  சிட்கோவில் உள்ள குடோனில் பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்

பட்டிருந்தது.

இதையடுத்து, திருமங்கலம் தொகுதி தேர்தல் அதிகாரி சவுந்தர்யா, பறக்கும் படை அதிகாரி சசிகலா, திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி ஆகியோர்  தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நேற்று மாலை குடோனுக்கு வந்தனர். இத்தகவல் திருமங்கலம் முழுவதும் பரவியதால்  திமுக, அமமுக உள்ளிட்ட மற்ற கட்சி நிர்வாகிகள் குடோன் முன் குவிந்தனர். ஆனால் குடோன் பூட்டிக் கிடந்தது. சாவியை கேட்டபோது, குடோன்  பொறுப்பாளர் தேடிப் பார்த்து விட்டு சாவி இல்லை எனக்கூறினார். சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு பிறகும் சாவி கிடைக்காததால், அதிகாரிகள்  குடோன் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முடிவு செய்தனர்.

இதனையடுத்து, குடோனில் சோதனை நடக்க உள்ள தகவல் தெரிந்து, திமுக ஒன்றிய செயலாளர் தனபாண்டி, அதிமுக நிர்வாகியான ஜெயலலிதா  பேரவை செயலாளர் தமிழழகன், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குடோன்  முன் குவிந்தனர். அனைத்துக் கட்சி வழக்கறிஞர்களும் அங்கு வந்தனர். அப்போது, திமுக, அதிமுக நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், குடோன் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே  நுழைந்து பார்வையிட்டனர்.

அங்கு, ஏராளமான கம்ப்யூட்டர்கள், மானிட்டர்கள், அமைச்சரின் படம் போட்ட பிளாஸ்டிக் வாளிகள், வேட்டிகள், துண்டுகள் மற்றும் ஜெயலலிதா,  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படம் போட்ட, ஆயிரக்கணக்கான கவர்கள் (பணம் இல்லாத நிலையில்) கட்டுக்கட்டாக  கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் அதிகாரிகளால் கணக்கெடுக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. குடோனில் பணம் ஏதும் சிக்கவில்லை. ஆளுங்கட்சியினர் பதுக்கிய பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் திருமங்கலம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: