அரசியலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை இளைஞர்களால் மட்டுமே மாற்ற முடியும்: சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி பேச்சு

பெங்களூரு: அரசியலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை இளைஞர்களால் மட்டுமே மாற்ற முடியும் என்று சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி கூறினார். பெங்களூரு பனசங்கரி கெம்பேகவுடா பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் பேசும்போது கூறியதாவது, ``நமது சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் என்று இரண்டு தரப்பினர் இருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டுக்கு பிறகு ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் எண்ணிக்கை குறைந்து இருக்கவேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் ஏழைகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டது. பணம் படைத்தவர்கள் தொடர்ந்து அதிக வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஏழைகள் ஒருவேளை உணவிற்காக படாதபாடு படுகிறார்கள். சமுதாயத்தில் இந்த ஏற்ற தாழ்வுகள் ஏற்படுவதற்கு அரசு மற்றும் ஊழல் அரசியல்வாதிகளே காரணமாகும். அரசு திட்டங்களில் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் மலிந்ததால் ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் அதே நிலையிலும் நீடிக்கிறார்கள். இதை சரி செய்யவேண்டும் என்றால் இளைஞர்கள் மனது வைக்கவேண்டும். அரசியல் மற்றும் சமுதாயத்தில் காணப்படும் முறைகேடுகள் அனைத்தும் களையப்படவேண்டும் என்றால் தற்போதுள்ள நிலை முற்றிலும் சரியாக வேண்டும். இந்த பணியில் இளைஞர்கள் ஈடுபட்டால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை மாறும். மகாத்மா காந்தியின் சுயராஜ்ஜியம் என்ற கனவு நிறைவேறும். இல்லையெனில் நூறாவது சுதந்திரதினம் கொண்டாடினாலும் எந்த மாற்றமும் ஏற்படாது’’ என்றார்.

Related Stories: