தலைமை ஆசிரியரின் முயற்சியால் குமரலிங்கம் அரசுப்பள்ளி நவீனமயமாகி வருகிறது

உடுமலை: தலைமை ஆசிரியரின் முயற்சியால் குமரலிங்கம் அரசுப்பள்ளி நவீனமயமாகி வருகிறது.உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கிராமப்புற மாணவர்கள் 769 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் இரவுக் காவலர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்ததால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக பள்ளி வளாகம் மாறியது.இதையடுத்து, தலைமை ஆசிரியர் மாரியப்பன் தனது சொந்த செலவில் சுற்றுச்சுவரை செப்பனிட்டார். மேலும் ஆசிரியர்களிடம் நிதி உதவி பெற்று விழா மேடை அமைத்தார்.

மாறிவரும் கால சூழ்நிலைக்கேற்ப பள்ளியை நவீனப்படுத்த வேண்டும் என நினைத்து, ஆசிரியர்களின் நிதி உதவியோடு பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இதன்மூலம் பள்ளி இல்லாத நாட்களில் வீட்டிலிருந்தே பள்ளியை கண்காணிக்கும் வகையில் கருவி பொருத்தப்பட்டு மொபைல் போனுடன் இணைக்கப்பட்டது.மாவட்டத்தில் நவீனமயமாகி வரும் அரசுப்பள்ளிகளில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியும் இடம் பெற்றுள்ளது. இதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: