காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..!

தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; டெல்டா மாவட்டத்திற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை அதிமுக அரசு அளித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து உபரிநீர் தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது அதிமுக அரசு. ரூ.290 கோடி மதிப்பில் கல்லணை கால்வாய் சீரமைத்தல் பாதுகாப்புத் திட்டம் நடைபெறுகிறது. நதிகள், ஓடைகள் என அனைத்து இடங்களிலும் தடுப்பணை கட்டி நீரை சேமித்து வருகிறோம்.

தமிழகத்தில் நீர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்வதே எனது லட்சியம். வீணாகும் மழை நீரை சேமிப்பதற்கு குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. காவிரி - கோதாவரி திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உதவுகிறது. காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசு.

நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இந்தியாவிலேயே, பயிர் காப்பீட்டில் அதிக இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தந்த மாநிலம் தமிழ்நாடு. தஞ்சாவூர் மாவட்டத்தில் 58 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: