கிழ்நத்தம் பகுதியில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கியதாக எழுந்தா புகாரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்: வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை முளையூரில் உள்ள நல்லறவான் கோயிலில் சுவாமி கும்பிட்டு விட்டு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி தட்டு மற்றும் குடங்களுடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர்களுக்கு தட்டுகளில் பணம் விநியோகம் செய்யப்பட்டது. சில இடங்களில் கட்சி நிர்வாகிகள் தட்டுகளில் பணம் விநியோகம் செய்வதும், ஒரு சிலருக்கு நத்தம் விஸ்வநாதனே தனது கையால் பணம் கொடுப்பதும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

இதனிடையே காட்டுவேலாம்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு தட்டில் பணம் போட்டதாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் பிரிவு கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நத்தம் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171Eன் கீழ் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: