காரை பறக்கும்படையினர் சோதனையிட்டபோது மிரட்டல் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது புகார் செய்த அதிகாரி மாற்றம்: எதிர்ப்பு கிளம்பியதால் உடனடியாக ரத்து

கோவில்பட்டி: கோவில்பட்டியில் காரை சோதனையிட்டபோது மிரட்டியதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது போலீசில் புகார் செய்த பறக்கும்படை அதிகாரியை மாவட்ட நிர்வாகம் வேறு தொகுதிக்கு மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மீண்டும் அதே தொகுதிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரியான நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர் மாரிமுத்து, சிறப்பு எஸ்ஐ முருகன் மற்றும் குழுவினர் கடந்த 12ம்தேதி கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது அவ்வழியாக கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான அமைச்சர் கடம்பூர் ராஜூ வந்த காரையும் அவருடன் வந்த நிர்வாகிகள் காரையும் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததோடு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வாகன சோதனையின்போது ஒத்துழைப்பு அளிக்காமல் தடுத்து மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.

 அதன் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது 353, 506 (ஐ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.  இதனிடையே, நேற்று முன்தினம் புகார் கொடுத்த பறக்கும்படை அதிகாரி மாரிமுத்துவை மாவட்ட நிர்வாகம் திடீரென விளாத்திகுளம் தொகுதிக்கு மாற்றம் செய்தது. ஆனால், இந்த பிரச்னை வெளியே தெரிய வந்ததால் அரசு ஊழியர்கள் சங்கங்கள் அவரது பணி மாறுதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாரிமுத்துவின் பணி மாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோவில்பட்டி தொகுதிக்ேக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Related Stories: