தமிழக அரசு இலவசமாக நிலத்தை அளித்தால் அனைத்து ரயில்வே திட்டங்களும் 5 ஆண்டுகளில் நிறைவு பெறும்: ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2008ல் புதிதாக ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த முடியாத காரணத்தால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டது. ரயில்வேத்துறையின் சார்பாக கேட்கப்பட்ட நிலத்தை மாநில அரசு விரைவாக கையகப்படுத்தியிருந்தால் அந்த திட்டம் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும். இந்த காரணத்தால் நாகர்கோவிலிருந்து புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை தற்போது உள்ளது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீட்டர் கேஜ் பாதைகளை அகலபாதைகளை மாற்றுதல், ஒருவழிபாதைஇருவழிபாதையாக மாற்றம் செய்தல், புதிய ரயில்பாதைகளை அமைத்தல், ரயில்பாதைகளை மின்மயமாக மாற்றுதல், புதிய முனைய வசதிகளை ஏற்படுத்துதல், புதிய ரயில்வே தொழிற்சாலைகளை அமைத்தல் ஆகிய முக்கிய திட்டங்கள் போதிய நிதி இல்லாத காரணத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து ஐம்பது சதவீத நிதியையும் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமாக ரயில்வேத்துறைக்கு கொடுத்தால் இந்த திட்டங்கள் விரைவாக நடைபெறும்.

தமிழகத்தில் புதிய இருப்புபாதை பணிகளாக மதுரை - தூத்துக்குடி வழி அருப்புகோட்டை - திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திபட்டு - புத்தூர், ஈரோடு - பழநி, சென்ன  - கடலூர் வழி மகாபலிபுரம், ஸ்ரீபெரும்பூர் - கூடவாஞ்சேரி, மொரப்பூர் - தர்மபுரி, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ஆகிய பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒருசில பணிகள் அனுமதி அளித்ததுடன் எந்த ஒரு பணியும் நடக்காமல் கிணற்றில் போட்ட கல்போல உள்ளது. தற்போது, தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியிடங்களில் சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் உள்ள காலிபணியிடங்களை சென்னையில் உள்ள ரயில்வே பணியாளர் தேர்வாணையமும் மதுரை கோட்டத்தில் உள்ள காலிபணியிடங்களை திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே பணியாளர் தேர்வாணையமும் தேர்வு செய்கிறது.

இதுமட்டுமில்லாமல் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் வரும் காலியிடங்களையும் சென்னையில் உள்ள ரயில்வே பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. இவ்வாறு தேர்வு செய்யும் பணியிடங்களை மற்ற மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை மாற்றி தமிழக இளைஞர்களுக்கு 100 சதவிகிதம் தேர்வு செய்து பணியிடங்கள் ஒதுக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் ரயில்வே போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விதாள்கள் தமிழ்மொழியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது நடைபெறும். தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விதாள்கள் தமிழ்மொழியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: