உடம்பு வலிக்கு ஊசி போடப்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு: காதல் திருமணம் முடிந்த 4 மாதத்தில் நிகழ்ந்த சோகம்

மதுரை: காய்ச்சல் மற்றும் உடம்பு வலியினால் அவதிப்பட்ட மருத்துவருக்கு அவரது கணவர் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊசியால் ஏற்பட்ட அதிதீவிர ஒவ்வாமை காரணமாக பெண் மருத்துவர் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த மருத்துவர் அசோக் விக்னேஷ் மதுரை மருத்துவ கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் மயக்கவியல் துறையில் பட்ட மேற்படிப்பு படித்த பெண் மருத்துவர் ஹரி ஹரணியும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குறியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த 5-ம் தேதி ஹரி ஹரணிக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக வீட்டிலேயே சிகிச்சை அளித்த அவரது கணவர் ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவர் ஹரி ஹரணி சுருண்டு விழுந்தார்.

அவரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மாட்டுத்தாவணியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரி ஹரணி இறந்து விட்டார். அவரது தந்தை ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலருக்கு சில மருந்து மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதிதீவிர ஒவ்வாமையாக மாறி மூச்சுக்குழல் சுருங்கியும், இதயஒட்டம் நின்றும் மரணம் நிகழும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் மருத்துவரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ள போலீசார் முதற்கட்ட விசாரணையில் பெண் மருத்துவரின் மரணத்தில் வேறு ஏதும் சதி திட்டம் எதுவும் நடந்ததாக கூறியுள்ளனர். திருமணமான 4 மாதங்களில் மரணம் நிகழ்ந்து இருப்பதால் உதவிக்கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். உடல்வலிக்கு ஊசி போட்டுக் கொண்டதால் பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: