ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 3 யானைகள் முகாம்: விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து பென்னிக்கல், ஆழியாளம், ராமாபுரம், அம்பலட்டி, கோபசந்திரம், கொம்மேப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் கிராம பகுதிகளுக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதிக்கு செல்லாமல் நீண்டநேரம் கிராம பகுதிகளில் முகாமிடுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தனப்பள்ளி அருகே பெண் ஒருவரை யானை தூக்கி வீசியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஓசூர் அருகே திருச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாப்பய்யா(65) என்பவர் யானையிடம் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12 யானைகள் அட்டகாசம்

வேப்பனஹள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 12 யானைகள் தமிழக எல்லை கிராமமான கொங்கனப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து வாழை, ராகி போன்ற பயிர்களை நாசம் செய்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் நுழைந்த யானைகள் நரசிம்மன் என்பவரது வாழைத் தோட்டத்தை நாசம் செய்தது. பயிர்களை சேதப்படுத்தும் யானைக் கூட்டத்தை வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: