கொளத்தூர் வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் நெருக்கடி

சென்னை: சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொளத்தூர் வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் ஆதிராஜாராம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கொளத்தூர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர். தென்சென்னை பகுதியைச் சேர்ந்தவர். எனவே இவரை மாற்றக்கோரி கொளத்தூரில் பலரும் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வேட்பாளரும் விருப்பமின்றி இந்த தொகுதியில் போட்டியிடுவதாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதை மையமாக வைத்து ஆயிரம்விளக்கு தொகுதி கேட்டவருக்கு கொளத்தூர் ஒதுக்கியதால் அதிமுக வேட்பாளர் அதிர்ச்சி என்ற தலைப்பில் தகவல்கள் வெளியானது. இதனை நேற்று கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உடனடியாக கொளத்தூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தங்களது பதிவுகளை அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் நேற்று காலை கொளத்தூர் தொகுதி வேட்பாளர் ஆதிராஜாராம் கொளத்தூர் தொகுதிக்கு பிரசாரத்திற்காக வந்திருந்தார். இதில் ஒரு குறிப்பிட்ட அதிமுகவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.   மற்றவர்கள் புறக்கணித்தனர். மேலும் பாமக கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே பிரசாரத்திற்கு வந்திருந்தனர். பாஜவை சேர்ந்த 20 பேர் வந்திருந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவர்கூட பிரசாரத்திற்கு வரவில்லை. முதல்நாள் அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்கு வரும்போது இந்த நிலைமை என்றால் தேர்தல் நெருங்க நெருங்க என்ன ஆகுமோ என அதிமுகவினர் பேசிக்கொண்டனர். மேலும் பிரசாரத்திற்கு வந்த ஆதிராஜாராம் கடமைக்கு என்று  தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இரண்டு தெருக்களில் மட்டும் பிரசாரம் செய்து கிளம்பிவிட்டார். தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தலைமைக்கு பலரும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: