கேரள சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட 2 அமைச்சர்கள் உட்பட 6 பேருக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட 2 அமைச்சர்கள் உட்பட 6 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கேரளாவில் கடந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த கே.எம்.மாணி மீது மது பார்களுக்கு லைசென்ஸ் வழங்கியதில், பல கோடி ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கே.எம்.மாணி கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபைக்கு வந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

சட்டசபையில் இருந்த மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போதைய எம்எல்ஏக்கள் ஜெயராஜன், ஜலீல், குஞ்சு முஹமது, அஜித் சிவன்குட்டி, சதாசிவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிலர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி முன்னாள் எம்எல்ஏ சிவன் குட்டி கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தற்போது அமைச்சர்களாக உள்ள ஜெயராஜன், ஜலீல் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களான குஞ்சு முஹ,மது, அஜித், சிவன் குட்டி மற்றும் சதாசிவன் ஆகிய 6 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெற அனுமதி கோரி திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. ஆனால் உயர்நீதிமன்றமும் அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டசபைக்குள் நடந்த சம்பவம் என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தற்போது அமைச்சர்களாக உள்ள ஜலீல், ஜெயராஜன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 6 பேரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: