மாஜி தேர்தல் ஆணையரின் கருத்து: மீண்டும் ஓட்டுப்பதிவு இயந்திர சர்ச்சை...டெல்லி தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாவதால் டெல்லி தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ​​சமூக ஊடகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான போலி செய்திகளும் வைரலாகி வருகின்றன. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து வாக்குப்பதிவு எண்ணிக்கையை மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், ஐபிசியின் 500வது பிரிவு மற்றும் 1951ம் ஆண்டு  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 128வது பிரிவின் கீழ் சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, போலி  செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியவர்களை அடையாளம் கண்டு, கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் 21, 2017ம் ஆண்டில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், ‘குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறுகிறது’ என்று கூறியதாக அந்த வீடியோ பதிவு பேட்டியில் கூறப்படுகிறது. ஆனால், அந்த செய்தியை கிருஷ்ணமூர்த்தி அப்போதே நிராகரித்து அறிக்கை விட்டார். ஆனால், அதே வீடியோ பதிவு மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனால், தற்போது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

Related Stories: