மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் விடிய, விடிய சிறப்பு வழிபாடு

நெல்லை : நெல்லை, பாளை. சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் விரதம் இருப்பதும், கண் விழிப்பதும், சிவதரிசனம் செய்வதும் புண்ணியங்களை சேர்க்கும். இந்தாண்டு மகா சிவராத்திரி நாளையொட்டி நெல்லை, பாளையில் உள்ள சிவாலயங்கள் நேற்று இரவு முழுவதும் திறந்திருந்தன.

நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் கண் விழித்து நெல்லையப்பருக்கும், காந்திமதியம்மைக்கும் பூஜைகள் நடத்தினர். கோயிலில் உள்ள நந்தி முன்பு 701 ருத்ராட்ச சிவலிங்கம் வைத்து பூஜைகள் செய்தனர். நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் சிவனடியார்கள் சிவபூஜை செய்தனர். இதுபோல் பாளை சிவன் கோயில், கைலாசபுரம் கைலாசநாதர் கோயில், சந்திப்பு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வண்ணார்பேட்ைட அருணாசலரேஸ்வரர் கோயில், செப்பறை அழகிய கூத்தர் கோயில், மேலநத்தம் அழியாபதீஸ்வரர் கோயில்களில் வழிபாடு நடந்தது. இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்திருந்து சிவ வழிபாடுகளை நடத்தினர்.

பிரசித்திப் பெற்ற பாபநாசம் பாபநாச சுவாமி கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர், குற்றாலம் குற்றாலநாதர், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விடிய விடிய கோயில் நடை திறந்திருந்தது. சிவராத்திரி விழாவில் முதல் கால சிறப்பு வழிபாடு இரவு 10 மணிக்கும், இரண்டாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கும், நான்காம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடந்தது.

Related Stories: