‘பாஸ்’ஐ ‘புஸ்’ ஆக்கினார் கதர்துறை அமைச்சரை கதற விட்ட அதிமுக மாசெ: கூடவே இருந்து குழி பறித்தது எப்படி?

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கூடவே இருந்து, அவருக்கே கல்தா கொடுத்து தொகுதியை தட்டிப்பறித்த மாவட்ட செயலாளரால் அதிமுகவில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றவர் பாஸ்கரன். அந்த தேர்தலில் பல சீனியர்கள் சீட் கேட்டு காத்திருக்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவகங்கை ஒன்றிய தலைவராக இருந்த பாஸ்கரனுக்கு சீட் வழங்கினார் ஜெயலலிதா. வெற்றி பெற்ற அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைச்சர் பதவியும் கிடைத்தது.

பிரியா வலம்...

கடந்த 7 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் முன்னாள் எம்பி செந்தில்நாதன். இவர் மாவட்டத்தில் அமைச்சர் பங்கேற்கும் கட்சி, பொது நிகழ்ச்சிகளில் கூடவே வலம் வருவார். சில நேரங்களில் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் வருகைக்காக, கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் காத்திருந்த சம்பவங்களும் அதிகம் உண்டு. அமைச்சரும், மாவட்ட செயலாளரும் ஒன்றாக இருந்து கட்சியை கட்டிக் காக்கின்றனர் என அதிமுகவில் பலர் புளகாங்கிதம் அடைந்தனர். ஆனால் அப்போது அமைச்சருக்கு தெரிந்திருக்கவில்லை, நம் தலையிலேயே கையை வைப்பார் செந்தில்நாதன் என்று.

கனவிலும் நினைக்கலையே...

2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியவுடன் காரைக்குடி தொகுதி செந்தில்நாதனுக்கு, சிவகங்கை தொகுதி அமைச்சர் பாஸ்கரனுக்கு, திருப்பத்தூர் மருது அழகுராஜுக்கு என கிட்டத்தட்ட முடிவான நிலையில் திடீர் திருப்பமாக காரைக்குடி தொகுதி பாஜவுக்கு சென்றது. தனது தொகுதி பறிக்கப்படுமென, கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் பாஸ்கரன்.

தலைமைக்கு அழுத்தம்...

அமைச்சருக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவது கடினம் என்ற உளவுத்துறை ரிப்போர்ட், தொகுதிக்கு அமைச்சர் என்ற முறையில் எந்த உருப்படியான திட்டமும் கொண்டு வராதது, மணல் கடத்தலில் ஏற்பட்ட கெட்ட பெயர் என அமைச்சரை சுற்றி வட்டமடித்த பிரச்னைகளை தனக்கு சாதகமாக்கியும், ஏற்கனவே தனக்குள்ள மேலிட செல்வாக்கை பயன்படுத்தியும் செந்தில்நாதன் சீட் வாங்கிவிட்டார். தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இபிஎஸ்சிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் பாஸ்கரன். சீட் வாங்காமல் சென்னையில் இருந்து ஊர் திரும்ப போவதில்லை என உறுதியாக இருப்பதாகவும், மீண்டும் தனக்கு சீட் வழங்கவில்லை என்றால் வேறு முடிவு எடுக்கவும் தயாராய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமைச்சரின் தொகுதியை அவருக்கு கிடைக்காமல் மாவட்டச் செயலாளர் வாங்கி வந்தது அதிமுகவினர் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தட்டி பறித்தது தவறு

சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் சிலர் கூறுகையில், ‘‘காரைக்குடி தொகுதியில் ஓராண்டாகவே செந்தில்நாதன் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த தொகுதியை பாஜவுக்கு தாரை வார்த்து விட்டனர். அவருக்கு காரைக்குடி தொகுதி கிடைக்கவில்லை என்றாலும், மாவட்டச் செயலாளராக தேர்தல் பணியை செய்திருக்க வேண்டும். அமைச்சரின் சிவகங்கை தொகுதியை தட்டிப் பறித்தது தவறு. அமைச்சர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை அதனால் தான் சீட் வழங்கப்படவில்லை என ஒத்துக்கொண்டது போல் ஆகி விட்டது. அமைச்சருக்கு சீட் வழங்கப்படாதது குறித்து என்ன விளக்கம் சொன்னாலும் ஏற்க மாட்டோம்’’ என்றனர்.

Related Stories: