உட்கட்சி மோதலால் உத்தரகாண்ட் முதல்வர் பதவி பறிப்பு; அடுத்த ‘ஹிட் லிஸ்டில்’ கர்நாடகா, அரியானா முதல்வர்கள்?: தலைமைக்கு புகார்களை தட்டிவிடும் பாஜக எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அங்குள்ள 70 தொகுதிகளில்,  பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களை  பெற்றது. மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் செயல்பட்டு வந்த நிலையில் அவரது தலைமை மீது மாநில பாஜக தலைவர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அடுத்தாண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை அவரது தலைமையின் கீழ் பாஜக எதிர்கொள்வது சிறப்பாக இருக்காது என்றும் அவர்கள் கூறி வந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களை திரிவேந்திர சிங் ராவத் நேரில் சந்தித்தார். இந்த பரப்பான சூழலில் அவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் ராணி மவுரியாவிடம் அளித்தார். உத்தரகாண்ட் மாநில முதல்வரின் பதவி முன்கூட்டியே பறிக்கப்பட்ட நிலையில், உட்கட்சி மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு விவகாரத்தில் சிக்கலில் உள்ள மாநில முதல்வர்களையும் மாற்றிட பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பாஜக தலைமை தாங்கள் ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களின் மாநில முதல்வர்களுக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், அரசு மற்றும் கட்சியின் செயல்பாடுகள் விரைவில் மதிப்பிடப்படலாம். எனவே, அதற்கு மாநில தலைமை தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘உத்தரகண்ட் முதல்வர் மீது அதிருப்தி உருவானதால், அவரது பதவி பறிக்கப்பட்டது. அடுத்த பட்டியலில் கர்நாடகாவும், அரியானாவும் உள்ளன.

கர்நாடகாவை பொருத்தமட்டில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள், அமைச்சர் மீதான பாலியல் புகார், நிர்வாகத்தில் குளறுபடி போன்ற புகார்கள் உள்ளன. அரியானாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக முதல்வர் மனோகர் லால் கட்டர் கையாண்ட விதம் சரியில்லாததால், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வரை சென்றுள்ளது. அதனால் மேற்கண்ட இருமாநில முதல்வர்களின் பதவியையும் பறிக்க அந்தந்த மாநில எம்எல்ஏக்களிடம் இருந்து தலைமைக்கு புகார்கள் வருகின்றன. அதனால், அவர்களின் பதவியை பறிக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியில் இருந்த போது அப்போதைய முதல்வர் ரகுவார் தாசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் கூறிய  அதிருப்தியை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அதனால், அடுத்து நடந்த பேரவை தேர்தலில் கட்சி தோல்வியை சந்தித்தது. எனவே, அதுபோன்ற சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றனர்.

Related Stories: