தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் 16 பேருக்கு வாய்ப்பு; தற்போதைய 3 அமைச்சர்களுக்கு குட் பாய்.!!!

சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தாமக ஆகிய கட்சிகள் இடம் பிடித்துள்ளனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை அதிமுக 177 வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டுள்ளது. பாஜக சார்பில் 20 தொகுதிகளும், பாமக சார்பில் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தற்போது உள்ள 3  அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ள நிலோபர் கபில், தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்  துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகிய 3 அமைச்சர்களுக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்கள்

நத்தம் விஸ்வநாதன், கே.வி.ராமலிங்கம், கே.பி.முனுசாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், தாமோதரன், கு.ப.கிருஷ்ணன், மு.பரஞ்சோதி, இசக்கி சுப்பையா, பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, சின்னய்யா, வைத்திலிங்கம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  வைகைச்செல்வன், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 16 முன்னாள் அமைச்சர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர்களில் பெரும்பாலோனோருக்கு, கடந்த முறை 2016ம் ஆண்டு போட்டியிட்ட சட்டமன்ற தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையம்  தொகுதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைபோல், கடந்த முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கே, இந்த முறையும் அதே தொகுதியில்  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: