பராமரிப்பு இன்றி பரிதாப நிலையில் மணிமண்டபம்: பெரியாறு தந்த பென்னி குக்குக்கு நினைவுநாளில் மரியாதை இல்லை: பொதுப்பணித்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

கூடலூர்: பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக். இவரது தியாகத்தை போற்றி தமிழக அரசு லோயர்கேம்பில் மணிமண்டபம் கட்டியது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மணிமண்டபத்தில் பென்னிகுக் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் விவசாயிகள், பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். நேற்று பென்னிகுக் 110வது நினைவுதினத்தை முன்னிட்டு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பொன் காட்சிக்கண்ணன் தலைமையில் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் மண்டபம் பராமரிக்கப்படாமலும், நினைவுநாளை முன்னிட்டு பொதுப்பணித்துறையினர் மாலை கூட அணிவிக்காததை கண்டித்தும் அங்கேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரவேண்டும் எனக்கூறி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் கம்பத்தில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை  நடத்தினர். ஒரு வாரத்தில் பழுதடைந்த லைட்களை மாற்றுவது, மண்டபத்தை பராமரிக்க ஆட்கள் வைப்பது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: