கொள்கை முடிவு என சொல்லும் முதல்வர் அவர்களே!: 7 பேர் விடுதலை தொடர்பாக நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?.. அற்புதம்மாள் கேள்வி..!!

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்த பிறகு மேற்கொண்ட சட்ட நடவடிக்கை என்ன? என்று முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டில் தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகால தாமதத்திற்கு பிறகு கடந்த ஜனவரி 25ம் தேதி அந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்தார். 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், கொள்கை முடிவு என கூறும் முதலமைச்சர் ஆளுநர் தீர்மானத்தை நிராகரித்த பிறகு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அற்புதம்மாள் வெளியிட்டுள்ள பதிவில், 30 மாதங்களுக்கு முன் இதேநாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கூடி விடுதலை தீர்மானம் நிறைவேற்றியதாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த ஜனவரி 25ம் தேதி அந்த தீர்மானம் செல்லாது என்றார் ஆளுநர். கொள்கை முடிவு என சொல்லும் மாண்புமிகு முதல்வர் அவர்களே இதுகுறித்து எடுத்த சட்டநடவடிக்கை என்ன? என குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரட்டை ஆளுள் தண்டனையும் தாண்டியுள்ளதால் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பல ஆண்டுகாலமாக சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி அற்புதம்மாள் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளார்.

Related Stories:

>