அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பிரிவை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவு பிரிவுகளை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் பிரபாகரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட  மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை ஒதுக்குகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள், இதுபோல் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை. மாறாக, சின்னங்கள் பட்டியலை வெளியிட்டு, அவற்றை  ஒதுக்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்தியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை  செய்யும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். தமிழக  சட்டமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் தங்கள் கட்சிக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி,  செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு,  நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் உத்தரவை எதிர்த்த மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.மேலும், சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு அனைத்து  தொகுதிகளிலும் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை 7 நாட்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>