கணவன் இறப்பால் குடும்பத்தில் வறுமை ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து 2 மகளுடன் தாய் தற்கொலை முயற்சி: திருவள்ளூர் அருகே பரபரப்பு

சென்னை: கணவர் இறப்பு காரணமாக வறுமையின் பிடியில் சிக்கியதால் மின்சார ரயிலில் இருந்து கீழே குதித்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை மின்சார ரயில் புறப்பட்டது. பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்றபோது, பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த கதிரேசன் மனைவி முனிலட்சுமி (38), தனது மகள்கள் ஹர்ஷினி (13), வர்ஷினி (7) ஆகியோருடன் அதில் ஏறினார்.

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே ரயில் சென்றபோது, முனிலட்சுமி திடீரென தனது 2 மகள்களுடன் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதில் முனிலட்சுமியின் வலது கை முறிந்தது. 2 மகள்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து சக பயணிகள் கூச்சலிட்டு ரயிலை நிறுத்தினர். இதையடுத்து பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு, முதலுதவி அளித்தனர். தகவலறிந்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த தாய் மற்றும் 2 மகள்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

டாக்டர்களின் பரிந்துரையின்படி அவர்கள் மூவரும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முனிலட்சுமியின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், குடும்பம் வறுமையில் தவித்தது. 2 மகள்களை வைத்து வாழ்க்கை நடத்த வழியில்லாத முனிலட்சுமி, மனமுடைந்து மகள்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>