லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி: போரூரில் இலவச லேப்டாப் வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் லேப்டாப் வழங்கவில்லை என்று மாணவ மாணவிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், போரூர் அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017 - 2018ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், லேப்டாப் வழங்க வலியுறுத்தியும், 50க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று பள்ளியின் முன்பு தங்களது பெற்றோருடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போரூர் போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் லேப்டாப் வழங்கக்கூடாது என்பதாலும், தேர்தல் முடிந்த பிறகு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>