திருநின்றவூர் பேரூராட்சியில் எங்கெங்கு காணினும் குப்பை நோய்பிடியில் தவிக்கும் மக்கள்

ஆவடி: ஆவடி அருகே திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேரும் குப்பையை பேரூராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றாததால்  சாலையோரங்களில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; திருநின்றவூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. மக்கும் குப்பை, மக்கா குப்பை சேகரிப்பதில் பேரூராட்சி நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலை  மற்றும் தெருக்களில் உள்ள குப்பையை சரிவர அகற்றாமல் உள்ளதால் பல தெருக்களில் உள்ள தொட்டிகளில் குப்பை நிறைந்து வழிகின்றன. சில இடங்களில் முக்கிய சாலைகளில் குப்பை சிதறி கிடக்கின்றன.

இங்குள்ள சி.டிஎச் சாலையோரங்களில் கால்நடைகளின் கழிவுகளை கொட்டிவருவதால் கடும் துர்நாற்றம் வீசுகின்றன. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையில் தேங்கி  கிடக்கும் குப்பையை ஊழியர்கள் அள்ளுவது கிடையாது குப்பையை ஊழியர்களே தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால், அனைவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள் சுகாதார சீர் கேட்டால் நோய் பாதிப்புக்கு ஆளாகி  வருகின்றனர். இனி மேலாவது திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரிகள் கவனித்து சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் குப்பையை தீவைத்து எரிக்காமல்  முறையாக அகற்றவும்  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுநலச்சங்கள், பொதுமக்களை திரட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: