பிரதமர் நாற்காலியை மதிக்கிறேன்; ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது...மம்தா பானர்ஜி பிரச்சாரம்.!!!

கொல்கத்தா: பிரதமர் பொய் சொல்வதைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நேற்று தனது முதல் பிரசாரத்தை மேற்கொண்டார். கொல்கத்தாவில் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த பாஜ கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இடதுசாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, மாற்றத்தை தருவார் என நம்பி மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க மக்கள் வாக்களித்தனர்.

ஆனால், அவர் மக்களுக்கு துரோகம் செய்து அவர்களை அவமதித்து விட்டார். மக்கள் நம்பியதைப் போல, மக்களின் சகோதரியாக (தீதி என அழைப்பார்கள்) மம்தா இருக்கவில்லை. அவரது மருமகனுக்கு நல்ல அத்தையாக மட்டுமே இருந்துள்ளார். (மம்தா தனக்குப் பிறகு தனது மருமகனான எம்எல்ஏ அபிஷேக்கை அடுத்த முதல்வராக காய் நகர்த்துவதை பிரதமர் மோடி குறிப்பிட்டார்). நாட்டின் 130 கோடி இந்தியர்களும் எனக்கு நண்பர்கள்தான். இங்குள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியை நாங்கள் உறுதிபடுத்துவோம். ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். மேற்கு வங்கத்தில் பாஜ.வால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தாக்கி பேசினார். அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகிய இரு சிண்டிகேட் அமைச்சர்கள் வங்காளத்திற்கு வந்து பொய் சொல்கிறார்கள். நான் ஒரு பிரதமரின் நாற்காலியை மதிக்கிறேன், ஆனால் ஒரு பிரதமர் பொய் சொல்வதைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

வங்காள பெண்கள் பாதுகாப்பற்றவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் வங்காளம் பாதுகாப்பற்றதாக இருந்தால் பெண்கள் காலை 12 மணிக்கு அல்லது அதிகாலை 4 மணியளவில் சுற்றித் திரிந்து வேலை செய்வது எப்படி?: என்றும்   மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: